மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (16.11.2022) பார்வையிட்டார். மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள 68,000 ஹெக்டர் நிலப்பரப்பில், 35 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் 2,756 வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்தன. இந்த மழையால் மாவட்டத்தில் 287 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தரங்கம்பாடி தாலுகாவில் தலைச்சங்காடு ஊராட்சியில் பயிர் சேதங்களைப் பார்வையிட்டார. அவரிடம், விவசாயிகள் மழைநீரால் மூழ்கி அழுகிய பயிர்களை எடுத்துக் காண்பித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் அதே பகுதியில் தனியார் திருமண கூடம் ஒன்றில் 1,308 குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா 5 கிலோ அரிசி, போர்வை, புடவை ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டது. போதைப்பொருள் தங்குதடையின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கிடைப்பதால், இளைய தலைமுறையினர் சீரழிந்து வருகின்றனர். அ.தி.மு.க தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க என்பது தேசிய கட்சி. ஒவ்வொரு முறையும் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் வரும்போது சந்திக்க வேண்டும் என்பதில்லை. அ.தி.மு.க – பா.ஜ.க என்பது இரு வேறு கட்சிகள்.
2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி நிச்சயம் அமையும். இதில் அ.ம.மு.க-வுக்கு ஒருபோதும் இடமில்லை. தமிழகத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் மழை வெள்ள பாதிப்புகளை பார்க்கச் சென்ற இடங்களிலெல்லாம் அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ யாரும் வந்து பார்க்கவில்லை என்று பொதுமக்கள் கண்ணீர் மல்க வேதனையை தெரிவித்துள்ளனர். உண்மையில் ஸ்டாலின்தான் மகிழ்ச்சியாக உள்ளார்.
தி.மு.க .ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. சீர்காழி தாலுகாவில் திருவெண்காடு பகுதிக்கு வந்த முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை என்பதை மக்கள் என்னிடம் மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும். கடந்த 2021 ஜனவரி 16-ம் தேதி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், `மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், பழனிசாமி வழங்குவாரா?’ என்று அறிக்கை வெளியிட்டார்.
தற்போது முதல்வராக உள்ள நிலையில் அதனை நிறைவேற்றுவாரா? அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு முடக்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம் தாலுகா மக்களுக்கும் சேர்த்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்” என்றார்.