ஐஸ்வால் மிசோரமில், ஒரு கல்குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது, நேற்று முன் தினம் கற்கள் சரிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான எட்டு பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில், முதல்வர் சோரம் தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, நாதியல் மாவட்டத்தில், மவுதார் கிராமத்தில் உள்ள ஒரு கல்குவாரியை, தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த குவாரியில் நேற்று முன் தினம் ௧௩ தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, மலையில் இருந்து கற்கள் பெயர்ந்து தொழிலாளர்கள் மீது விழுந்தன. இதில், ஒருவரை தவிர, அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி புதைந்தனர்.
தகவலறிந்து, உள்ளூர் போலீசார், அசாம் ரைபிள்ஸ் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று, உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இரவு முழுதும் நடந்த இந்த மீட்புப் பணியில், எட்டு தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ‘தொழிலாளர்கள் கல்குவாரியில் மிகவும் ஆழமாக தோண்டியதால், மலை அப்படியே சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement