களக்காடு: களக்காட்டில் 30 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பாழடைந்துள்ள துணை சுகாதார நிலையம் விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர். களக்காடு கோவில்பத்து பகுதியில் இயங்கி வரும் துணை சுகாதார நிலையத்தில் கோவில்பத்து மற்றும் களக்காடு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கர்ப்பிணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். வாரத்தில் திங்கள், புதன்கிழமை என இரு நாட்கள் செவிலியர் சிகிச்சை அளித்து வருகிறார்.
மற்ற நாட்களில் துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளை கடந்துள்ளதோடு பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. மருந்துக்குக்கூட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் துணை சுகாதார நிலைய சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் கட்டிடத்தை சுற்றிலும் செடி, கொடிகள் படர்ந்து புதர் மண்டி கிடக்கின்றன. அத்துடன் சுகாதார நிலையத்தை சுற்றிலும் குப்பை கூளங்கள் குவிந்து கிடக்கின்றன. இங்குள்ள செடிகளில் கொசு உள்ளிட்டவை உற்பத்தியாகி நோய்களை பரப்பும் வகையில் காட்சி அளிக்கிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட சமூக விரோத கும்பல் இரவு வேளையில் இங்கு வந்து மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கட்டிடம் மழையில் நனைந்து நீர் இறங்கி அபாயகரமான சூழலில் உள்ளது.
எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் ெசலுத்துவதோடு பராமரிப்பின்றி பாழாகியுள்ள துணை சுகாதார நிலையத்தை சீரமைக்கவும், தினசரி மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர். மேலும் இதை வலியுறுத்தி நகராட்சி கவுன்சிலர் ஆயிஷா லக்கிராஜா திருக்குறுங்குடி வட்டார மருத்துவ அதிகாரியிடம் மனு அளித்தார்.