சித்தூர்: கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த காட்டு யானையை அதிகாரிகள் ஜேசிபி உதவியுடன் மீட்டனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மோகினி அருகே காண்டுலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய விளை நிலம் வனப்பகுதியையொட்டி உள்ளது. வழக்கம்போல் ரமேஷ் தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவைக்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று சென்றார். அப்போது கிணற்றில் இருந்து யானையின் பிளீறல் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது காட்டு யானை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கிராமமக்களுக்கு தெரிவித்தார். கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்க முயன்றனர். மேலும் சித்தூர் கிழக்கு வனத்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறை அதிகாரி சைதன்யகுமார் மற்றும் வனத்துறையினர் வந்து யானையை மீட்க போராடினர். பின்னர் கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டினர்.
கிணற்றில் பல மணி நேரம் தத்தளித்த யானை இந்த வழியாக வெளியே வந்தது. தொடர்ந்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்தி காயங்கள் அடைந்துள்ளதா? என கால்நடைத்துறையினர் பரிசோதனை செய்தனர். யானைக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, யானையை பங்காருபாளையம் வனப்பகுதிக்கு விரட்டினர்.