அகமதாபாத்: குஜராத் மாநில சூரத் கிழக்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் கடத்தப்பட்டு, பின்னர் மிரட்டப்பட்டு தனது வேட்புமனுவை வாபஸ் பெறவைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அந்த வேட்பாளர் சொந்தக் கட்சியையே விமர்சித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் சூரத் கிழக்கு தொகுதி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா திடீரென மாயமானார். நேற்று மாலை அவர் கடத்தப்பட்டதாக வழக்கு பதிவானது. அவர் போலீஸார் புடைசூழ தேர்தல் அலுவலகத்திற்கு வந்து மனுவை வாபஸ் வாங்கியது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட ஆம் ஆத்மி தேசிய செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தவ், “இந்த வீடியோவைப் பாருங்கள். காணாமல் போன எங்கள் வேட்பாளர். அடையாளம் தெரியாத நபர்கள் புடைசூழ, போலீஸ் பாதுகாப்புடன் வந்து மனுவை வாபஸ் பெறுகிறார். இது பாஜகவின் சதி. சுற்றியிருப்பவர்கள் பாஜகவினர் தான். அவர்களுக்கு போலீஸ் ஆதரவு வேறு. நேர்மையான சுதந்திரமான தேர்தல் என்பதெல்லாம் வெறும் பகடியாகிவிட்டது” என்று கூறியிருந்தார்.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அளித்த ஒரு பேட்டியில், “500 போலீஸார் பாதுகாப்புடன் எங்கள் வேட்பாளர் அழைத்துவரப்பட்டுள்ளார். அவரை மிரட்டி மனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர். இது ஜனநாயகத்தின் மீது வெளிப்படையான மிரட்டல் என்பதை நான் தேர்தல் ஆணையத்திற்கு சுட்டிக்காட்டுகிறேன்” என்று குற்றம் சுமத்தினார்.
தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தை சந்தித்து கடத்தல் குறித்து புகார் அளித்து, சூரத் (கிழக்கு) தேர்தலை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் கஞ்சன் ஜரிவாலா தரப்பில் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், “நான் பிரச்சாரத்துக்கு செல்லும் இடத்தில் எல்லாம் மக்கள், ஆம் ஆத்மி ஒரு தேச விரோத மற்றும் குஜராத்துக்கு எதிரான கட்சி, அந்தக் கட்சியின் வேட்பாளராக ஏன் ஆனேன் என்று கேட்கிறார்கள். அதனால், நான் ஆழ் மனது சொல்வதை கேட்க முடிவெடுத்தேன். எந்த அழுத்தமும் இன்றி வேட்புமனுவை வாபஸ் பெற்றேன். மக்கள் சொல்வதுபோல் தேசவிரோத கட்சியை என்னால் ஆதரிக்க முடியாது” என்று கஞ்சன் ஜரிவாலா பேசுகிறார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், பாஜக கடத்தியதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார். மேலும், “எனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான காரணம் சூரத் (கிழக்கு) சட்டமன்ற தொகுதி ஆம் ஆத்மி தொண்டர்கள் சமீப காலமாக ராஜினாமா செய்துவருகின்றனர். அவர்கள் பணம் கேட்டனர். ரூ. 80 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை செலவழிக்கும் திறன் எனக்கு இல்லை. இப்படி கட்சியில் இருந்து நிறைய நெருக்கடிகள் வந்தன. மக்கள் திரும்பத் திரும்ப போன் செய்து தொல்லை கொடுத்தார்கள். அதனால் தான் எனது மகனின் நண்பர்களுடன் சென்றுவிட்டேன். இதில் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார். இது இந்த விவகாரத்தில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.