சிறு மலைகளால் சூழந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கல் குவாரிகளுக்கு பஞ்சமில்லை. மாவட்ட நிர்வாக தகவலின்படி, கற்கள், கருப்பு கிரானைட், பல வண்ண கிரானைட் எடுக்கும் குவாரிகள், 240-க்கும் மேற்பட்டவை இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான குவாரிகளில் அரசு விதிமுறைகள் துளியும் மதிப்பதில்லை, அரசியல் கட்சியினர் சட்டவிரோதமாக ‘கல்லா’ கட்டுகின்றனர் என்பது மக்களின் நீண்டகால புகாராக இருக்கிறது.
இந்த நிலையில், ‘குவாரிகளால் நிம்மதியாக வாழ முடியவில்லை,’ எனக் கூறி, கிராமத்தை காலி செய்து, 2 கி.மீ., தொலைவில் டென்ட் அமைத்து, ஐந்து நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தும் கொரட்டகிரி கிராம மக்களையும், அவர்கள் குடியிருப்புகளையும் நேரில் சென்று பார்வையிட்டோம்.
160-க்கும் குறைவான வீடுகளைக்கொண்ட அந்த கிராமத்திலிருந்து வெறும், 400 மீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே, கல் குவாரிகளும், கற்களை உடைத்து எம்.சாண்டு தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைந்திருக்கின்றன. எம்.சாண்டு, கற்கள் ஏற்றிச்செல்லும் ரோட்டிலேயே அரசு தொடக்கப் பள்ளியும், வீடுகளும் இருந்தன. கிராமத்தினுள் மக்கள் காலி செய்து கைவிடப்பட்ட சில வீடுகளும் இருந்தன.

தெலுங்கு கலந்த தமிழில் நம்மிடம் பேசிய போராட்டக் களத்திலிருந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த சி.மஞ்சுநாத், கே.எம்.மஞ்சுநாத் ஆகியோர், “எல்லா நேரமும் லாரிகள்ல எம்.சாண்டு, கல் கொண்டு போரதால, தினம் வீட்டுக்குள்ள மண், துாசியா வருது, குழந்தைங்க, பெரியவங்க மூச்சுவிடவே சிரமப்படுறாங்க. நேரம் காலம் இல்லாம நைட்டெல்லாம் வெடி வைக்குறாங்க, அதும் நைட் நேரம் லைனா எட்டு குவாரிகள்லையும் வெடி வைக்குறாங்க. பல பேர் இங்க பிழைக்க முடியாதுனு, வீட்ட விட்டுட்டு ஊர விட்டே போய்டாங்க; அவங்க வீடுங்க எல்லாம் ஒடஞ்சு கிடக்கு.

ஒரு வருஷமா போராட்டம் நடத்தியும் குவாரிகள மூடாம, எங்க கோரிக்கைகள நிறைவேற்றாம இருக்காங்க. அதிகாரிங்க குவாரிகளுக்கு ஆதரவா செயல்படுறதால, போனவாரம் வெள்ளிக்கிழமை (11 –ம் தேதி) எல்லாரும் வீட்டவிட்டு வந்து, இங்க டென்ட் போட்டு போராட்டம் பன்றோம்.
இதனால, வெள்ளிக்கிழமை, எங்க ரெண்டு பேரோட சேர்ந்து, எட்டு பேர் மேல, குவாரி வண்டிகள உடைச்சோம்னு போலீஸ்ல கேஸ் போடரேனு சொன்னாங்க. போலீஸ்காரங்க, குவாரிக்காரங்க, அரசியல்வாதிங்க, கிராம மக்கள பல வகைகள்ல மிரட்டுறாங்க. குவாரிகள நிரந்தரமா மூடாம நாங்க வீட்டுக்கு போகமாட்டோம், குவாரிகள மூடுற வரைக்கும் ஓயமாட்டோம்” என்றனர் வருத்தத்துடன்.
தங்களுக்கு ஆதரவாக ஆரம்பம் முதல், பா.ஜ.க., கட்சியினர் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, பிரச்னை பேசுபொருளானதால், 14-ம் தேதி மாலை கிருஷ்ணகிரி காங்., எம்.பி., செல்லகுமார் சம்பவ இடத்துக்கு வந்து, 15-ம் தேதி வரையில் ஆதரவளித்தார். இதைத்தவிர தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளிலிருந்து யாரும் தங்களை எட்டிக்கூட பார்க்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
பிரச்னை குறித்து விளக்கம் கேட்க, ஒசூர் சப்-கலெக்டர் சரண்யாவை பல முறை போனில் தொடர்பு கொண்டும், அவர் போன் எடுக்கவில்லை. அவர் விளக்கமளிக்கும் பட்சத்தில் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.
வேணும்னே சொல்றாங்க!
குவாரிகளின் அத்துமீறல்கள் குறித்து, கிருஷ்ணகிரி கனிம வளத்துறை துணை இயக்குநர் வேடியப்பனிடம் போனில் கேட்டதற்கு, ‘‘எட்டு குவாரிகளில், இ.சி (என்விரோன்மென்டல் கிளியரன்ஸ்) சான்றிதழ் பெறாமல் இருப்பதால், ஆறு குவாரிகள் செயல்படுவதில்லை, இரண்டு மட்டுமே செயல்படுகின்றன. பிரச்னையால் ஆறு மாதங்களாக குவாரிகள் செயல்படவில்லை, எட்டு குவாரிகளும் செயல்படுவதாக மக்கள் வேண்டுமென்றே தெரிவிக்கின்றனர். அத்துமீறல்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அத்துமீறலில் ஈடுபட்ட, 34 குவாரிகள் மீது, 320 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

முதல்வர் நடவடிக்கை எடுப்பார்னு நம்பரேன்!
நம்மிடம் பேசிய, போராட்ட களத்தில் இருந்த கிருஷ்ணகிரி காங்., எம்.பி செல்லகுமார், “கொரட்டகிரியிலுள்ள குவாரிகளால் மக்களின் வாழ்வாதாரம் சீரழிகிறது. கொரட்டகிரி மட்டுமல்ல கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலும் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எடுப்பது, அனுமதியின்றி செயல்படும் குவாரிகள் என, பல அத்துமீறல்கள் பகல் கொள்ளை போல் நடக்கின்றன. சக்திவாய்ந்த வெடியால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது, காற்று, நீர் மாசுபாடு என பலவகைகளில் சுகாதாரம் பாதிக்கிறது.
சமீபத்தில், 30 குவாரிகளில் ஆய்வு செய்ததில் அத்துமீறல் கண்டறியப்பட்டு, 300 கோடி ரூபாய்க்கு மேல் சூறையாடப்பட்டது கண்டறியப்பட்டிருக்கிறது. அனைத்து குவாரிகளிலும் ஆய்வு செய்தால் பல கோடி ரூபாய் மோசடி கண்டறியப்படும். இது தொடர்பாக நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, விழுப்புரம் பொதுக்கூடத்தில் நான் வழக்கு தொடுத்ததை பாராட்டி, `இந்தப் பிரச்னைக்கு நடவடிக்கை எடுப்பேன்’ எனக் கூறினார். இன்று ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார்; குவாரி பிரச்னையில் அவர் நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன்’’ என்றார்.