மதுரை: ஆதீன நிலத்தை மீட்கக்கோரிய வழக்கில், கோயில் நிலங்கள் மீட்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். திருச்சியை சேர்ந்த சாவித்ரி துரைசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான நிலம் உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் அருகே உள்ளது. பல கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை பலர் ஆக்கிரமித்துள்ளனர். நிலம் தொடர்பான வழக்கில் ஆதீனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுத் தருமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
மனுதாரர் தரப்பில், ‘‘ஆதீன நிலங்களை அளவீடு செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர், கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என எச்சரித்தனர். பின்னர், கோயில் நிலங்கள் மீட்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.