மதுரை: ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் வீரர்களுக்கு வழங்கப்படுவது போல் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சேர்ந்த மதுரேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறுவோருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ரொக்கப் பரிசாக மத்திய அரசு வழங்குகிறது. மாநில அரசு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்குகிறது. அதே நேரத்தில் பொதுவான ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவோருக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை விருது மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது. மாநில அரசோ ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை வழங்குகிறது.
அனைத்து விதமான வீரர்களையும் மத்திய, மாநில அரசுகள் சமமாக பார்ப்பதில்லை. வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பதில்லை. அனைத்து வீரர்களையும் சமமாக நடத்த வேண்டும். எனவே, தமிழகத்தில் சிறப்புத் திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஒரே மாதிரியான சலுகை வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 12 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.