கோவை: டேன் டீ தேயிலை தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைப்பதை அரசு வாபஸ் பெறும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும் என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை வால்பாறை அருகே சின்கோனா பகுதியில் உள்ள டேன் டீ அரசு தேயிலை தோட்டம், நீலகிரி கூடலூர், நடுவட்டம், குன்னூர் டேன் டீ தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொழிலாளர்களின் குடும்பங்களில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் சுமார் 2500 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், தற்போது வசிக்கும் இடத்தை காலி செய்து ஒப்படைத்தால்தான் பணிக்கொடை வழங்கப்படும் என தொழிலாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். தமிழக அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து எம்எல்ஏக்கள் பொன்.ஜெயசீலன், அமுல் கந்தசாமி ஆகியோர் தலைமையில் டேன் டீ தொழிலாளர்கள், கட்சி நிர்வாகிகள் அறப்போராட்டத்தை முன்னெடுத்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற அறப்போராட்டத்தை நசுக்க நினைக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
டேன் டீ தேயிலை தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைப்பதை வாபஸ் பெறும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.