புதுடெல்லி: தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைத்ததற்காக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி டெல்லியை அடுத்த சூரஜ்குந் பகுதியில் நடைபெற்றது. இதில், கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி உற்பத்தியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கோயில்பட்டி எம்.எல்.ஏவான கடம்பூர் ராஜூ பேசும் போது, “தீப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதமாக குறைத்து, அந்த தொழிலுக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புத்துயிர் அளித்துள்ளார்,’ என தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பொதுவாழ்வில் இருக்கும்போது நமது சொந்த மண்ணுக்கு செய்யும் எந்த செயல்களுக்கும் நன்றி சொல்ல தேவையில்லை. அதுபோன்ற எண்ணத்தில் தற்போது வரையில் நான் செயல்பட்டதும் இல்லை. குறிப்பாக, தென் தமிழ்நாடு மழை இல்லை என்றால் கடும் வறட்சியான பகுதியாக இருக்கும். அங்குள்ள மக்களின் துயரங்களை நான் நன்றாக அறிவேன். இருப்பினும், அப்பகுதியில் உள்ள முன்னோர்கள் தொலைநோக்கு பார்வையுடன் இதுபோன்ற தீப்பெட்டி தொழிற்சாலைகளை நிறுவி அந்த பகுதி மக்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய வைத்துள்ளனர்.
தீப்பெட்டி உற்பத்தியில் உலகளவில் அதிகமாக உற்பத்தி செய்வது சிவகாசிதான். உலகளவில் 100 தீப்பெட்டிகளில் 30 சதவீதம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தயாரிக்கப்பட்டது என்ற பெருமையை சேரும். விவசாயம் செழிக்காத பூமியில் ஏழ்மை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பது தீப்பெட்டி தொழிற்சாலைகள். விரைவில் தமிழகத்தில் நேரில் ஆய்வு செய்து, தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் ஒன்றிய அரசு தரப்பில் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.