மது போதையில் வகுப்பறைக்கு வந்து மாணவிகளை கிண்டல் செய்த 12ம் வகுப்பு மாணவனை கண்டித்த தலைமை ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 17) என்பவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கஞ்சா போதையில் பள்ளிக்கு வந்த மாணவன் விக்னேஷ் வகுப்பறையில் இருந்த மாணவிகளை கிண்டல் செய்துள்ளார். இதனை தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் கண்டித்தார்.
அப்போது தலைமை ஆசிரியருக்கும் மாணவன் விக்னேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சக ஆசிரியர்கள் மாணவனை கண்டித்து வெளியே அனுப்பினர்.
இந்த நிலையில் நேற்று மாலை தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் தனது அறையில் இருந்தார். அப்போது அங்கு வந்த மாணவர் விக்னேஷ் திடீரென தலைமை ஆசிரியரை கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதையடுத்து அவரை சக ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர் விக்னேஷை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்.