தூத்துக்குடி: அந்தமான் கடற்பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறுவதால் 20-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுபெறக் கூடும் என்றும் இதனால், வருகிற 20-ம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள பகுதிகளில் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 19-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகிற 19-ம் தேதி வரை மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 12செ.மீ. மழையும், தென்காசி மாவட்ட ஆயக்குடியில் 9செ.மீ. மழையும் பதுவாகியுள்ளது. இதனிடையே திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கியதால் மீனவர்கள் மற்றும் கடலோர மக்கள் அச்சத்திற்கு ஆளாகினர். அஷ்டமி, நவமி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் கடல்நீர் உள்வாங்கி கடல்நீர் மட்டம் உயர்வதோ, குறைவதோ இயல்பு. தற்போது திருச்செந்தூர் கடல்நீர் உள்வாங்கியதால் 10 அடிக்கும் மேல் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது.