புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மூன்று தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளது. இக்கல்லுாரிகளில் ஆண்டு தோறும் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சென்டாக் மூலம் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, அனைத்து மாநில அரசுகளும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் முதல் கட்ட கலந்தாய்வை கடந்த அக்.17 முதல் 28ம் தேதிவரை நடத்தி, மாணவர் சேர்க்கையை கடந்த 4ம் தேதி முடித்ததோடு, இரண்டாம் கட்ட கலந்தாய்வை மேற்கொண்டுள்ளன.
ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு தரவரிசை பட்டியல் கூட வெளியிடாதது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சீட் ஒதுக்கீட்டை இறுதி செய்து, விரைவில் கலந்தாய்வை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் புதுச்சேரி மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க நிர்வாகிகள் நேற்று காலை கவர்னர் தமிழிசையை சந்தித்து, விரைவில் எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் நடந்த வேண்டி மனு கொடுத்தனர்.

இந்நிலையில் எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை நேற்று மாலை 3:00 மணிக்கு சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், பிம்ஸ், மணக்குள விநாயகர் மற்றும் வெங்கடேஸ்வரா கல்லுாரிகளில் தலா 150 இடங்கள் என மொத்தம் 450 சீட்டுகள் உள்ளன. அதில், பிம்ஸ் மற்றும் மணக்குளவிநாயகர் மருத்துவக் கல்லுாரிகள் தலா 56 இடங்களும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி 53 இடம் என மொத்தம் 165 இடங்கள் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மூன்று கல்லுாரிகளிலும், வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீடாக மொத்தம் 64 இடங்களும், இதர ஒதுக்கீடாக 71 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லுாரியான, இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி ஆராய்ச்சி நிறுவனத்தில் மொத்தம் உள்ள 180 இடங்களில் அரசு ஒதுக்கீட்டிற்கு 131 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 27 இடங்களும், வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவிற்கு 22 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தனியார் கல்லுாரிகளில் 165 இடங்களும், இந்திராகாந்தி மருத்துவக் கல்லுாரியில்131 இடங்கள் என மொத்தம் 296 இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டுள்ளது.
இது கடந்தாண்டை விட 5 இடங்கள் குறைவாகும். இந்த 296 இடங்களும் சென்டாக் மூலம் நிரப்பப்படவுள்ளது. இதற்கான கவுன்சிலிங், இந்த வார இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement