திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும், ஒவ்வொரு மாத பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் நேற்று, தெலுங்கானாவைச் சேர்ந்த பாவனாலயா நாட்டிய பயிற்சி நிலையத்தை சேர்ந்த 18 பரத நாட்டியக் கலைஞர்கள், பரத நாட்டியம் ஆடிக்கொண்டே 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்றனர்.
இது கிரிவலம் சென்ற பக்தர்களிடையே பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நாட்டிய நிகழ்ச்சியை தொடங்கிய நடனக் கலைஞர்கள், கிரிவலப்பாதை முழுவதும் ஆன்மிக பாடல்களுக்கு தகுந்தபடி நடனமாடிக் கொண்டு கிரிவலம் சென்றனர்.
நடந்து கிரிவலம் செல்வதே கடும் சவாலாக இருக்கும் நிலையில், நாட்டியமாடியபடி 18 நடனக் கலைஞர்கள் கிரிவலம் சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக சாதனை முயற்சியாக இதனை மேற்கொண்டதாக நடனக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.