ஐதராபாத்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணா, மாரடைப்பால் நேற்று அதிகாலை இறந்தார். அவருக்கு வயது 79. தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு, நேற்று முன்தினம் காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் கிருஷ்ணா மாரடைப்பால் இறந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்ட கிருஷ்ணா, சினிமா படங்கள் தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1942ம் ஆண்டு மே 31ம் தேதி பிறந்த கிருஷ்ணா, 1965ம் ஆண்டு ‘தேனே மனசுலு’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அவர் புராணம், மேற்கத்திய பாணி, ஆக்ஷன் கதைகளிலும் நடித்து புகழ் பெற்றார். மொத்தம் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
முதல் சினிமாஸ்கோப் படம், அல்லூரி சீத்தாராம ராஜு (1974), முதல் ஈஸ்ட்மேன்கலர் படம், ஈனாடு (1982), முதல் 70 மிமீ படம், சிம்ஹாசனம் (1986) மற்றும் முதல் டிடிஎஸ் உள்பட, தெலுங்குத் திரையுலகில் பல தொழில்நுட்பங்கள் முதன்முதலில் அறிமுகமான படம் வீர லேவரா (1995). இவை அனைத்தும் கிருஷ்ணாவின் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மொசகல்லக்கு மொசகாடு’ மூலம் தெலுங்கு சினிமாவுக்கு கவ்பாய் வகையை அறிமுகப்படுத்தினார். குடாச்சாரி 116 (1966) மற்றும் ஏஜென்ட் கோபி (1978) போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கில் ஸ்பை த்ரில்லர்களை பிரபலப்படுத்தினார். அரசியலிலும் ஈடுபட்டு எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டதுடன், ஆந்திரா பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றார். என்டிஆர் தேசிய விருதையும் பெற்றார். கிருஷ்ணா மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விக்ரம், சிரஞ்சீவி, பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், நாகார்ஜுனா, ராம் சரண், விஷால், இயக்குனர் ராஜமவுலி உள்பட திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணா மறைவையொட்டி இன்று தெலுங்கு படப்பிடிப்புகள், பட வேலைகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.