மராட்டியத்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் காவலர் தூக்கு போட்டு தற்கொலை..!

மும்பை,

மராட்டிய மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரவீன் விஸ்வநாத் கடம் என்பவம் இன்ஸ்பெக்டராக துலே மாவட்டத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளார். வருகிற நவம்பர் 21-ந்தேதி போலீஸ் பயிற்சி மையத்தில் பட்டமளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று மதியம் இதற்கான ஏற்பாடுகளில் பிரவீன் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவரது அறையின் கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட சக ஊழியர்கள் கதவைத் தட்டினர். உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, ​​பிரவீன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் நிதின் தேஷ்முக் தலைமையிலான குழு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. பிரவீனின் அறையில் சோதனை செய்தபோது அவர் எழுதிய குறிப்பு ஒன்று கிடைத்தது. அதில் அவர், தன்னுடைய மரணத்துக்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நாசிக்கில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ள போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.