திருச்சூர், கேரளாவில், காட்டு யானை துரத்தியதை அடுத்து, டிரைவர் பஸ்சை 8 கி.மீ., துாரத்துக்கு ‘ரிவர்ஸ் கியர்’ போட்டு ஓட்டிய ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில், சாலக்குடியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில், ௪௦ பயணியருடன் பஸ் ஒன்று நேற்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது, திடீரென எதிர்புறத்திலிருந்து காட்டு யானை ஒன்று பஸ்சை நோக்கி வேகமாக ஓடி வந்துள்ளது.
அது ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய பாதை என்பதால், பஸ்சை திருப்ப முடியாத டிரைவர் யானையின் தாக்குதலிலிருந்து தப்பிக்க, ரிவர்சில் வேகமாகச் செலுத்தி உள்ளார்.
காட்டு யானையும், அம்பலபாரா முதல் அனக்கயம் என்ற இடம் வரை ௮ கி.மீ., துாரத்துக்கு பஸ்சை விடாமல் துரத்தியது.
கடுமையான வளைவுகள் உள்ள மலைப் பாதையில், டிரைவர் படு சாமர்த்தியமாக பஸ்சை இயக்கி, ௪௦ பயணியரின் உயிரைக் காப்பாற்றினார்.
யானை பஸ்சை துரத்தும் இந்தக் காட்சியை பயணி ஒருவர் தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது வேகமாக பரவி வருகிறது.
கபாலி என பெயரிடப்பட்டுள்ள இந்தக் காட்டு யானை, அப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றி வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
மலைப்பாதையில் பஸ்சை லாவகமாக பின்னோக்கி ஓட்டிச் சென்ற டிரைவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement