பெரும்பாலான விளையாட்டு வீரர்களும், ஆரோக்கியத்தின் மீது கவனமாய் இருப்பவர்களும், புகைப்பிடித்தலை அறவே தவிர்ப்பதுண்டு. புகைப்பழக்கமும் ஆரோக்கியமும் இருவேறு துருவங்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், சீனாவைச் சேர்ந்த 50 வயது அங்கிள் சான் (Uncle Chen) `குவாங்சூ மாரத்தான்’ ஓட்டத்தில், செயின் ஸ்மோக்கிங் செய்து கொண்டே தன்னுடைய ஓட்டத்தை முடித்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா..?
குவாங்சூ மாரத்தானில் பங்கேற்ற இவர், தன்னுடைய முழு சிகரெட் பாக்கெட்டையும் ஒன்றன்பின் ஒன்றாகப் புகைத்து முடித்துள்ளார். சிகரெட்டை பற்ற வைத்து, புகைத்துக் கொண்டே இவர் ஓடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
`யாரு சாமி இவரு நமக்கே டஃப் கொடுப்பாரோ’ என்பது போல, 42 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டத்தில், 26.2 மைல் தொலைவை 3 மணி நேரம் 28 நிமிடங்களில் கடந்து 574-வது இடத்தை பிடித்துள்ளார்.
மாரத்தான் என்பது அதிவிரைவு ஓட்டங்களைப் போல அல்ல. அதற்கு உடலும் மனதும் திடத்தோடு இருத்தல் அவசியம். ஆனால் இவர் கவனம் பெற, மூன்று விஷயங்கள் காரணம்… முதலில் இவரது வயது, இரண்டாவது இவர் செயின் ஸ்மோக்கிங் செய்தது, மூன்றாவது மற்ற 926 போட்டியாளர்களை ஒப்பிடுகையில் இவர் திறம்பட நன்றாக ஓடியது.
“Uncle Chen” es mi nuevo héroe. Hace 3:28:45 en la Guangzhou maratón de China… FUMANDO. Se la suda todo. Y con ese tiempo queda el 574 de 1.500!. Antes había corrido también fumando siempre en tiempos cercanos a 3:30. pic.twitter.com/ncHlJcLF6R
— Gonzalo Quintana (@quintanagonzo) November 15, 2022
இன்னும் சொல்லப்போனால் இவர் மாரத்தானில் சிகரெட் பிடித்து ஓடுவது முதல்முறையல்ல. 2018-ல் குவாங்சூ மாரத்தானிலும், 2019 -ல் ஜியாமென் மாரத்தானிலும் இவர் பல பாக்கெட் சிகரெட்களை புகைத்து காலி செய்து ஓடியுள்ளார் என்று கூறப்படுகிறது.
சீனாவைச் சேர்ந்த வேறு சில அறிவிப்புகளின்படி, இவர் சாதாரணமாக செயின் ஸ்மோக்கர் இல்லை என்றும், மாரத்தான்களின்போது மட்டும் இவர் புகைப்பார் என்றும் கூறியுள்ளனர். இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
இவரின் இந்த செயல் பலரின் கவனத்தை ஈர்த்தாலும், இது தவறென்றும் மாரத்தானில் ஓடும்போது இது போன்ற செயல்களைத் தடை செய்ய வேண்டும் எனவும் பலரும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.