கோவை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலி தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை காலியாபுரம் பகுதியை சேர்ந்த 37 வயது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனது மூத்த மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று எனது மூத்த மகள் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றபோது, கூலி தொழிலாளியான முத்து(55) என்பவர் எனது மகளிடம் பாலியல் தொல்லை அளிக்கும் வகையில் தவறாக பேசியுள்ளார்.
மேலும் அவர் கடந்த சில நாட்களாக எனது மகள் வெளியில் செல்லும்போது பின் தொடர்ந்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை என் மகள் என்னிடம் கூறி கதறி அழுதாள். இதனால் முத்து மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஆனைமலை போலீசார் முத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.