NATO – நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேரவுள்ளதை அறிந்த ரஷ்யா, உக்ரைன் மீது அறிவிக்கப்படாத போரை நடத்திவருகிறது. கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் ‘ரஷ்யா- உக்ரைன்’ இடையேயான இப்போரின் பாதிப்பால் ஏராளமான உக்ரைன் நாட்டு மக்கள் தங்களின் அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் இப்போரில் தங்கள் உயிர்களை, உறவுகளை, உடமைகளை, கல்வியை இழந்து தவிக்கின்றனர். அதுமட்டுமின்றி போரினால் இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவது ‘ரஷ்யா- உக்ரைன்’ போர்க்களத்தின் பதற்றத்தை இன்னும் அதிகரித்து, உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 15ம் தேதி) உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள போலந்தின் லுபெல்ஸ்கி மாகாணத்தில் இரண்டு ஏவுகணைகள் விழுந்திருப்பதாகவும், இந்தத் தாக்குதலில் இரண்டு போலந்து நாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதையடுத்து இந்த ஏவுகணைகள் ரஷ்யாவின் தயாரிப்பு, ரஷ்யாவின் இந்தத் தாக்குதலால் இரண்டு போலந்து நாட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்று போலந்து குற்றம் சாட்டியிருந்தது.
மேலும், இது தொடர்பாக போலந்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லுகாஸ் ஜசினா வெளியிட்டிருந்த செய்தி அறிக்கையில், “நவம்பர் 15, 2022 உக்ரைன் முழுவதும் ரஷ்யக் கூட்டமைப்பின் ஆயுதப் படைகளால் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற்பகல் 3:40 மணியளவில் போலந்தின் லுபெல்ஸ்கி மாகாணம் ஹ்ரூபிஸ்ஸோ மாவட்டத்தில் உள்ள ப்ரெஸ்வோடோவ் கிராமத்தில் ரஷ்யா தயாரித்த ஏவுகணை விழுந்திருக்கிறது. இதன் விளைவாக போலந்து நாட்டைச் சேர்ந்த இருவர் இறந்துவிட்டார்கள். இது தொடர்பாக ரஷ்யா விளக்கமளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தது.

இந்த விவகாரம் குறித்து ரஷ்யாவை சாடிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, “இன்று, ரஷ்ய ஏவுகணைகள் நேட்டோ பிரதேசமான போலந்தைத் தாக்கி மக்கள் இறந்துள்ளனர். அதற்கான எங்கள் இரங்கல்களை ஏற்றுக்கொளுங்கள். நேட்டோ பிராந்தியத்தில் ஏவுகணைகளை வீசுவது கூட்டுப் பாதுகாப்பு மீதான ரஷ்யாவின் தாக்குதலாகும். இது மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதனிடையே உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் எந்த நேரடிச் சம்பந்தமும் இல்லாத நேட்டோ கூட்டமைப்பில் இருக்கும் போலந்து நாட்டின் மீது இந்த ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளதால் இந்த விவகாரம் உலக நாடுகளைத் திரும்பி பார்க்க வைத்தது. ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியிருக்குமேயானால் இது நேட்டோ அமைப்பின் கூட்டுப் பாதுகாப்பு மீதான தாக்குதல் என்று கருதப்படும்.
மேலும், இதன் மூலம் ‘உக்ரைன் – ரஷ்யா’ போரில் இதுவரை மறைமுகமாக உக்ரைனுக்கு உதவி, ரஷ்யாவை எதிர்த்து வரும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் நேரடியாகப் போர்க்களத்தில் இறங்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

பலர் இந்த ஏவுகணைத் தாக்குதல் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்துவிட்டது என்று அச்சுறுத்தி வருகின்றனர். இது சமூக வலைதளங்களிலும் பரவி `World War III (WWIII)’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகத் தொடங்கியது.
இந்தப் போர் பதற்றத்தைத் தணிக்கும் விதமாகவும், போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் துடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், ஏவுகணை விபத்து தொடர்பாக போலந்து நாடு நடத்தும் விசாரணைக்கு அமெரிக்கா முழு ஆதரவு தரும் என பைடன் உறுதியளித்திருந்தார்.
நேட்டோ அமைப்பும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அவசரக் கூட்டத்தை இன்று (நவம்பர் 16ம் தேதி) கூட்டியது.
இந்த விசாரணையின் முதற்கட்டக் கட்டமாக நடந்த இந்தக் கூட்டத்திற்குப் பிறகு நேட்டோ கூட்டமைப்பின் பொது செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் செய்தியாளர்களைச் சந்தித்து போலந்து ஏவுகணை விவகாரம் தொடர்பாகப் பேசினார்.

இதன்படி, நேற்று (நவம்பர் 15ம் தேதி) போலந்தைத் தாக்கிய ஏவுகணை ரஷ்யாவுடையது அல்ல, உக்ரைன் ராணுவம்தான் தற்காப்பிற்காக தவறுதலாக ஏவுகணையை போலந்து நாட்டின் மீது செலுத்தியுள்ளது என்று நேட்டோ கூட்டமைப்பின் பொது செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
எதுவாகினும் யுத்தம் வேண்டாம் என்பதுதான் மக்களின் ஒருமித்தக் கருத்தாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.