ஆளுநரை திரும்ப பெற உடனடி நடவடிக்கை வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்.!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுகிறார், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குறித்து பேசுகிறார் எனக் குற்றஞ்சாட்டி, ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற வலியுறுத்தி, தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய மனுவை, கடந்த நவம்பர் 9ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளித்தனர்.

குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்ட 9 பக்க மனுவில், “தமிழகத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், மொழி பேசுபவர்கள், பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினர் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். மாநிலத்தின் மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லாததை பகிரங்கமாக வெளிப்படுத்தும் வகையில், ஆளுநர் அடிக்கடி பிரிவினைவாதப் பேச்சுகளில் ஈடுபடுகிறார். ஆபத்தான, பிளவுபடுத்தும் மதச் சொல்லாடல்களை பொதுவெளியில் வெளிப்படுத்துகிறார். அவர் பேச்சுகள் மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் உள்ளன.

ஆளுநர் ரவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. தமிழகத்தில் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குறித்து அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இது அரசியலமைப்பு சட்டம் 159வது பிரிவின் கீழ் தமிழ்நாட்டு மக்களின் சேவை மற்றும் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணிப்பதாக எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறும் செயல் என்பது தெளிவாகிறது. அவரின் பேச்சு, செயல்கள் மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். அவரின் பேச்சு, செயல்கள் மூலம் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். எனவே, உடனடியாக அவரை திரும்ப பெற வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரும் தமிழக எம்.பி.க்களின் மனுவின் மீது

உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்கிசிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு‌ தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இது குறித்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது டிவிட்டர் பதிவில், ‘‘பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களின் அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் ஆளுநர்கள் மூலமாக தலையீடு செய்வதும், சர்ச்சைகளை உருவாக்குவதும் மோடி அரசின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழக ஆளுநர் ரவி அவர்கள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டும், அவருடைய பொறுப்புக்கு ஒவ்வாத வகையிலும், அத்துமீறியும் தொடர்ந்து பேசி வருகிறார்.

பல்வேறு முக்கிய பிரச்சனைகளில் தமிழகத்தின் நிலைப்பாட்டை மறுதலித்து, ஒன்றிய அரசின் குரலாக ஒலித்து வருகிறார். தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்ட வரைவுகளை முடக்கி வைக்கிறார். தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் அதனைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்ததோடு, இனி பொறுப்பதற்கில்லை என்ற சூழலில், குடியரசுத் தலைவர் தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக தமிழக ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்’’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.