ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் பகுதியில் பினாயக் ஆச்சார்யா கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் சீனியர்கள் கும்பலாக கூடி ராகிங் செய்யும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
அந்த விடியோவில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஒரு மாணவியை ராகிங் செய்கின்றனர். ஐ லவ் யூ என கூறி மாணவியை வலுக்கட்டாயமாக முத்தமிடுகின்றனர். ஒவ்வொரு முறையும் மாணவி அந்த இடத்தை விட்டு வெளியேற முயலும் போது, பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பதாக மிரட்டல் விடுக்கப்படுகிறது.
அதேபோல் மற்ற மாணவர்கள் முன்னிலையில் ஜூனியர் மாணவர்களை அடித்தும் துன்புறுத்தியுள்ளனர். வைரலான இந்த விடியோவின் அடிப்படையில் ஆக்ஷனில் இறங்கிய பெர்காம்பூர் போலீசார், ராகிங்கில் ஈடுபட்டவர்களில் முக்கியமான சீனியர் மாணவனை கைது செய்தனர்.
ஹர்தக்ந்தியில் உள்ள சாந்தி நகரைச் சேர்ந்த அபிஷேக் நஹக் என்பதும், அவர் மீது வேறு சில வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் மற்ற மாணவர்களின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தற்போது அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.