டாக்டர் படிச்ச அனைவருக்கு அரசு வேலை சாத்தியமில்லை: அமைச்சர் மா.சு!

சென்னை,அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் பட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பட்டம் மேற்படிப்பு இட ஒதுக்கீடு ஆணையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது:

தமிழக சுகாதாரத்துறையினர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடியல் பெற்றுள்ளனர். விருப்பத்திற்கேற்ப வெளிப்படைத்தன்மையுடன் பணியிட மாறுதல், கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

நாமக்கல்லில் சித்த மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. மிக விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைய இருக்கிறது. இதேபோல பழனியில் 50 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது. திருவண்ணாமலை அடிவாரத்தில் ஒரிரு மாதங்களில் சித்த மருத்துவமனை அமைய இருக்கிறது. இதற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் சித்தா பல்கலைக் கழகம் அமைப்பதற்கு ஆளுநரிடம் இருந்து விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாதவரம் பகுதியில் இந்த பல்கலைக்கழகத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் படித்த அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியமில்லை. இதுதொடர்பான புகாருக்கு உரிய விசாரணை நடத்தி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் என்பது ஏற்க முடியாத ஒன்று. இனியும் இதுபோன்றகொரு துயர சம்பவம் நிகழாமல் இருக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் விரைவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.