நியூசிலாந்தில் வேலை வாங்கி தருவதாக 44 நபரிடம் லட்சகணக்கில் மோசடி!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (29) கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் வசித்து வருகிறார். தமிழ்ச்செல்வன் பீளமேடு அண்ணாநகர் பகுதியில் எஸ்.டி. குளோபல் பிளேஸ்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். .ஆன்லைன் மூலமும் இந்த நிறுவனம் தொடர்பான தகவல்களை வெளியிட்டார். நியூசிலாந்து நாட்டுக்கு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் , நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி கொடுப்பதாகவும் கூறினார். ஆனால் வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்ப எந்த அனுமதியும் இவர் பெறவில்லை. ஆன்லைன் அறிவிப்பை நம்பி பலரும் தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டனர்.

மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் முன்பணமாக ரூ .1லட்சம் முதல் 3லட்சம் என பணம் வசூலித்துள்ளார். மேலும் அவர்களது பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக்கொண்டார். பணம் செலுத்தியவர்கள் நம்புவதற்காக வேலை கிடைத்ததற்கான போலி கடிதத்தை தயாரித்து அனுப்பினார். மேலும் விமான டிக்கெட்டுகளையும் எடுத்து அதன் காப்பியையும் அனுப்பி கூடுதலாக பணம் வசூலித்து வந்துள்ளார். அதன் பின்னர் விமான டிக்கெட்டை ரத்து செய்துவிடுவார். விமான டிக்கெட் வந்துவிட்டது வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பலரும் பணம் செலுத்தினார்கள்.

மதுரை செல்லூரை சேர்ந்த விஜயன் என்பவர் வேலை கிடைக்காததால் கோவை வந்து விசாரித்தபோது தான், தமிழ்ச் செல்வன் மோசடி செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதே போல் இன்று மட்டும் 16 பேர் புகார் செய்தனர் . போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ஞானபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் தமிழ்ச்செல்வனின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது . அப்போது பலரிடம் வாங்கி வைத்து இருந்த 44 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்ச்செல்வன் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது 16 பேர் மட்டும் ரூ.17 லட்சம் அளவுக்கு பணத்தை இழந்துள்ளதாக புகார் செய்துள்ளனர். 44 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து இருப்பதால் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். மோசடி நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.