சூரத்: பாஜவினரால் ஆம் ஆத்மி வேட்பாளர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், காஞ்சன் ஜரிவாலா தரப்பில் ஒரு வீடியோ வெளியானது. அதில், ‘இந்த விவகாரத்தில் பாஜவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. நானாகத்தான் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வேட்பு மனுவை வாபஸ் பெற்றேன்’ என காஞ்சன் ஜரிவாலா விளக்கம் அளித்துள்ளார். இதனால் குஜராத் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரு கட்ட தேர்தல் நடக்கிறது. வாக்குகள், டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, ஆளும் பாஜ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியான காங்கிரசும், பாஜவுக்கு கடும் நெருக்கடி அளிக்க தயாராக உள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது.இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் சூரத் கிழக்கு தொகுதி வேட்பாளர் காஞ்சன் ஜரிவாலா திடீரென மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக நேற்று மாலை வழக்கு பதிவானது. போலீசார் புடைசூழ தேர்தல் அலுவலகத்திற்கு வந்த அவர், தனது மனுவை வாபஸ் பெற்றது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோவை வெளியிட்ட ஆம் ஆத்மி தேசிய செய்தி தொடர்பாளர் ராகவ் சத்தவ், “இந்த வீடியோவை பாருங்கள். காணாமல் போன எங்கள் வேட்பாளர். அடையாளம் தெரியாத நபர்கள் புடைசூழ, போலீஸ் பாதுகாப்புடன் வந்து மனுவை வாபஸ் பெறுகிறார். இது பாஜவின் சதி. சுற்றியிருப்பவர்கள் பாஜவினர்தான். அவர்களுக்கு போலீஸ் ஆதரவும்கூட. நேர்மையான சுதந்திரமான தேர்தல் என்பதெல்லாம் வெறும் பெயரளவில்தான்’ என்று கூறியிருந்தார்.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அளித்த பேட்டியில், “500போலீசார் பாதுகாப்புடன் எங்கள் வேட்பாளர் அழைத்து வரப்பட்டுள்ளார். அவரை மிரட்டி மனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர். இது ஜனநாயகத்தின் மீது வெளிப்படையான மிரட்டல் என்பதை தேர்தல் ஆணையத்திற்கு சுட்டி காட்டுகிறேன்’என்றார். தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தை சந்தித்து, இந்த கடத்தல் குறித்து புகார் அளித்து, சூரத் (கிழக்கு) தேர்தலை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர். ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் காஞ்சன் ஜரிவாலா தரப்பில் ஒரு வீடியோ வெளியானது. அதில், “நான் பிரசாரத்துக்கு செல்லும் இடத்தில், ‘ஆம் ஆத்மி ஒரு தேச விரோத மற்றும் குஜராத்துக்கு எதிரான கட்சி, அந்த கட்சியின் வேட்பாளராக ஏன் ஆனீர்கள்’ என்று மக்கள் கேட்கிறார்கள்.
அதனால், எனது ஆழ் மனம் சொல்வதை கேட்க முடிவெடுத்தேன். எந்தவித அழுத்தமும் இன்றி வேட்பு மனுவை வாபஸ் பெற்றேன். மக்கள் சொல்வதுபோல் தேசவிரோத கட்சியை என்னால் ஆதரிக்க முடியாது. எனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான காரணம் சூரத் (கிழக்கு) சட்டமன்ற தொகுதி ஆம் ஆத்மி தொண்டர்கள் சமீப காலமாக ராஜினாமா செய்து வருகின்றனர். அவர்கள் பணம் கேட்டனர். ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவழிக்கும் திறன் எனக்கு இல்லை. இப்படி நிறைய நெருக்கடிகள் வந்தன. மக்கள் திரும்ப திரும்ப போன் செய்து தொல்லை கொடுத்தார்கள். அதனால்தான் எனது மகனின் நண்பர்களுடன் சென்று விட்டேன். இதில் பாஜவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். இது இந்த விவகாரத்தில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.