பாட்னா: பீஹாரில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் சுமார் 24 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.
பீஹார் மாநிலம் ககாரியா பகுதியில் உள்ள 2 அரசு மருத்துவ நிலையங்களில் கருத்தடை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 24 பெண்களுக்கு வழக்கமாக கொடுக்கப்பட வேண்டிய மயக்க மருந்து எதுவும் கொடுக்கப்படாமல் விழிப்பில் இருந்த நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சிகிச்சையின்போது வலி தாங்காமல் அலறி துடித்ததாகவும், அப்போது 4 பேர் சேர்ந்து அவர்களின் கை, கால்களை பிடித்து கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ‛முறைப்படி மயக்க மருந்து கொடுத்தோம். ஆனால் சிலருக்கு அது சரியாக செயல்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என விளக்கமளித்தது. ஆனாலும், மயக்க நிலை வந்த பிறகு சிகிச்சை மேற்கொள்ளாமல் அவசரகதியில் துன்புறுத்தியவாறு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையை பலரும் விமர்சித்துள்ளனர்.
முன்னதாக அதே பீஹாரில் அராரியா மாவட்டத்தில் கடந்த 2012ல் 53 பெண்களுக்கு 2 மணி நேரத்திலேயே கருத்தடை அறுவை சிகிச்சை அளித்தது சர்ச்சையானது. அம்மாநில அரசு ஒரு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய என்.ஜி.ஓ.,க்களுக்கு ரூ.2100 வழங்குகிறது. இதற்காக அவசரகதியில் சிகிச்சை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement