80 ஆயிரம் ரயில்வே ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணிகளின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. இந்திய ரயில்வேயில் பயணிகளை ஏற்றி செல்ல மட்டும் 13 ஆயிரத்து 169 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதுபோல சரக்குகளை கையாள 8 ஆயிரத்து 479 சரக்கு ரயில்கள் உள்ளது. இவற்றை நிர்வகிக்க ரயில்வே துறையில் 17 மண்டலங்கள் மற்றும் 68 டிவிசன்கள் உள்ளன. இதில் மேற்பார்வை பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் 67 ஆயிரத்து 956 கிலோ மீட்டர் தூர இருப்பு பாதைகளில் பராமரிப்பு மற்றும் சேவை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து இருந்தனர். கொரோனா பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் ஊழியர்களின் கோரிக்கை குறித்த முடிவுகள் தள்ளிபோனது. தற்போது இக்கோரிக்கை குறித்து மத்திய அரசு முடிவெடுத்து உள்ளதாக ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ரயில்வே துறையின் ஊழியர்கள் கோரிக்கையை அரசு பரிசீலித்து முடிவு எடுத்துள்ளது. அதன்படி இத்துறையில் 7,8,9 ஆகிய நிலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்குரிய பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. அவர்கள் குரூப் ஏ பிரிவு ஊழியர்களுக்கு இணையாக நடத்தப்படுவார்கள்.

அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நிதி அமைச்சகமும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளிக்கப்படுவதன் மூலம் அவர்கள் பணி இன்னும் மேம்படும். உலகிலேயே சிறப்பாக செயல்படும் இந்திய ரயில்வே துறை இதன்மூலம் இன்னும் மேம்படும். அவர்கள் தான் இத்துறையின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களின் சேவையை பெரிதும் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். ரயில்வே ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு மூலம் ரயில்வே ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.