சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. கால்பந்து ஆட்ட வீராங்கனையான இவர், ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 7ம் தேதி பிரியாவுக்கு மூட்டு வலி பிரச்சனை காரணமாக முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது அவரின் காயத்திற்கு போடப்பட்ட கட்டு இறுக்கமாக கட்டப்பட்டதால் ரத்த ஓட்டம் இல்லாமல் காலில் ரத்தக்கட்டு ஏற்பட்டதாக தெரிகிறது.
கடந்த 8ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பிரியாவுக்கு, நவம்பர் 9ஆம் தேதி அறுவை சிகிச்சையின் மூலம் கால் அகற்றப்பட்டது.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரியா நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமைச்சர் கொடுத்த முதல்கட்ட தகவலின்படி கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அலட்சியமான (தவறான) சிகிச்சையால் மாணவி பிரியா உயிரிழந்தது தெரியவந்தது.
இந்நிலையில், கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு மருத்துவரின் தவறே காரணம் என்று, மருத்துவக் கல்வி இயக்குனரக அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, கவன குறைவால் மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல்துறை முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.