புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் இருவருக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.
அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சுகாதார அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ கடந்த2017-ல் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவரை அமலாக்கத் துறை கடந்த மே 30-ம் தேதி கைது செய்தது.
இந்நிலையில் சத்யேந்திர ஜெயின் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட வைபவ் ஜெயின், அங்குஷ் ஜெயின் ஆகியோர் ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான உத்தரவை சிறப்பு நீதிபதி விகாஸ் துல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் மூவரின் ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்படுவதாக நேற்று தீர்ப்பளித்தார்.
ஜெயின் தன்னுடன் தொடர்புடைய நான்கு நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜெயின், உள்ளிட்ட 10 பேர் மீது சமீபத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.