இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான “விக்ரம் – எஸ்”, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஹைதரபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இஸ்ரோ மற்றும் இன்ஸ்பேஸ் அமைப்புடன் இணைந்து தயாரித்த இந்த ராக்கெட், இன்று காலை சரியாக 11.30 மணியளவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, திட எரிபொருளை பயன்படுத்தி விண்ணில் ஏவப்பட்டது.
நவீன தொழில்நுட்பங்களுடன், 545 கிலோ எடையில், 6 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்ட விக்ரம் எஸ் ராக்கெட், மொத்தமாக 83 கிலோ எடைக் கொண்ட இரண்டு இந்திய மற்றும் ஒரு சர்வதேச செயற்கைக் கோள்களை சுமந்து சென்றது.
மூன்று செயற்கைக் கோள்களும் புவி மேற்பரப்பில் இருந்து 120 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக இந்த ராக்கெட்டுக்கு விக்ரம் என பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.