ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை அருகே பாலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் மனைவி ஜோதி. இவர்களுக்கு 22 வயதில் சுமித்ரா என்ற மகள் உள்ளார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அதே கம்பெனியில் பணியாற்றிய மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரததாஸ் என்பவருடன் சுமித்ராவுக்கு காதல் ஏற்பட்டது.
அதன் பின்னர், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தலைமறைவானார்கள். இதையறிந்த சுமித்ராவின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். இருப்பினும், அவர்களால் சுமித்ராவை கண்டுபிடிக்க முடியவில்லை.
ந்நிலையில் சுமித்ரா ஒரு வாரம் கழித்து தனது பெற்றோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தான் சுப்ரததாசை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது கொல்கத்தாவில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் சுமித்ராவின் பெற்றோர்கள் அவர் பேசிய எண்ணை தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பிறகு அவர்களால் சுமித்ராவை தொடர்பு கொள்ள முடியிவில்லை. இந்நிலையில் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு மீண்டும் சுமித்ரா தனது பெற்றோரை தொடர்பு கொண்டு தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர், 15 நாட்களுக்கு ஒரு முறை தனது பெற்றோருடன் பேசி வந்துள்ளார். நாளடைவில், சுமித்ரா தனது பெற்றோரிடம் சுப்ரததாஸ் குடித்து விட்டு வந்து தன்னை துன்புறுத்துவதாகவும், சூடு வைத்து சித்ரவதை செய்வதாகவும், தனக்கு தரும் சாப்பாட்டில் எச்சில் துப்பி கொடுப்பதாகவும் கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் சுமித்ரா தன்னை விட சொல்லி சுப்ரததாஸிடம் தெரிவித்துள்ளார். ஆனால் சுப்ரததாஸ் மறுப்புத் தெரிவித்து தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளார்.
இந்நிலையில், சுமித்ரா பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணிடம் செல்போன் வாங்கி தனது பெற்றோரிடம் வீடியோ கால் பேசி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட, சுமித்ராவின் பெற்றோர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனை சந்தித்து வீடியோகால் ஆதாரங்களை காட்டி புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்ற போலீசார் தனிப்படைக் குழு அமைத்து சுமித்ராவை மீட்க கொல்கத்தாவிற்கு விரைந்துச் சென்றனர்.