பெங்களூரு: எதிர்கால தொழில்நுட்பத்தில் இந்தியாவின் தடயங்கள் அனைத்து இடங்களிலும் இருக்கும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொருளாதாரத்துறை அமைச்சர் ஒமர் பின் சுல்தான் அல் ஒலாமா புகழாரம் சூட்டினார்.
பெங்களூருவில் 25-வது தொழில்நுட்ப உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் ஒலாமா பேசியதாவது: இந்தியா கடந்த காலமும், நிகழ்காலமும் மட்டுமல்ல. அது எதிர்காலம் என்பது எங்கள் நம்பிக்கை. எதிர்கால தொழில்நுட்பத்தில் இந்திய தடயங்கள் அனைவரிடமும், அனைத்து இடங்களிலும் இருக்கும்.
உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்காலத் தொழில்நுட்பங்களை இந்தியர்கள் வடிவமைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
எதிர்காலத் தொழில்நுட்பம் மட்டுமே இந்தியாவால் இயக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. தொழில்நுட்பம், கல்வி, நிதி மற்றும் பல துறைகளின் எதிர்காலங்கள் இந்தியாவால் மறுவடிவமைப்பு செய்யப்படும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் யுஏஇ, இந்தியா இடையே கையெழுத்தான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (சிஇபிஏ) தொழில்நுட்பங்களின் புதிய சகாப்தத்தை ஒன்றிணைப்பதற்கான ஒரு சிறந்த படியாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.