ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்ட நெரிசலால் படியில் நின்ற மாணவி பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆனைமல்லூர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முனியம்மாள். இவரது மகள் சாந்தகுமாரி(16) திமிரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக சாந்தகுமாரி ஆனைமல்லூரில் இருந்து அரசு பேருந்தில் வந்துள்ளார். அப்பொழுது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படியிலேயே நின்று கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து பேருந்து காவனூரில் இருந்து திமிரு செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக பேருந்து இருந்து சாந்தகுமாரி தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் காலில் பலத்த காயமடைந்த சாந்தகுமாரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
மேலும் இந்த சம்பவம் குறித்து திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.