கோவை: கார் திருடுபோனது குறித்து தகவல் தெரிவிக்க தாமதமானதால், காப்பீட்டுத் தொகையை அளிக்க மறுத்த நிறுவனத்துக்கு அபராதம் விதித்து கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக கோவை பீளமேட்டைச் சேர்ந்த பி.லோகேஷ் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கோவையில் உள்ள ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.23,975 செலுத்தி எனது காருக்கு காப்பீடு செய்திருந்தேன். இந்நிலையில், 2017 ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு எனது வீட்டின் முன்பு நிறுத்திருந்த கார் திருடுபோனது. இதையடுத்து, பீளமேடு காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி புகார் அளித்தேன். அவர்கள், ஆகஸ்ட் 10-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அந்த காரை கண்டறிய முடியாததால், கண்டறிய முடியவில்லை என நீதிமன்றத்தில் போலீஸார் அறிக்கை அளித்தனர்.
இந்த வழக்கு 2018 ஜனவரி 12-ம் தேதி முடித்து வைக்கப்பட்டது. பின்னர், திருடுபோன காருக்கான காப்பீட்டுத் தொகையை அளிக்கக்கோரி காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்தேன். ஆனால், கார் திருடுபோன 6 நாட்களுக்கு பிறகே நான் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், தங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறியும் அந்த கோரிக்கையை 2018 ஜூலை 26-ம் தேதி நிராகரித்தனர். எனவே, காப்பீட்டாளர் நிர்ணயித்த மதிப்பான (ஐடிவி) ரூ.8.23 லட்சத்தை வட்டியுடன் அளிக்கவும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.தங்கவேல், உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஜி.சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ”கார் திருடுபோனது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்காமல், 148 நாட்களுக்கு பிறகே மனுதாரர் தங்களிடம் தகவல் தெரிவித்ததாக காப்பீட்டு நிறுவனம் பதில் அளித்துள்ளது. இருப்பினும், ‘திருட்டு குறித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்க தாமதமானது என்ற காரணத்தை மட்டும் வைத்து நியாயமான கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது’ என்று வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019-ல் இதேபோன்ற ஒரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காப்பீட்டு விதிகளில் ஏதேனும் மீறப்பட்டிருந்தால் காப்பீட்டு மதிப்பில் 75 சதவீதம் வரை வழங்கலாம் என தீர்ப்பளித்துள்ளது. எனவே, மனுதாரரின் வாகனத்துக்கு காப்பீட்டாளர் நிர்ணயித்த மதிப்பு (ஐடிவி) ரூ.8.23 லட்சம் ஆகும். எனவே, அதில் 75 சதவீதமான ரூ.6.17 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம் அளிக்க வேண்டும். அதோடு, காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ.3 ஆயிரம் அளிக்க வேண்டும்” என்று அவர்கள் உத்தரவிட்டனர்.