சன்னி லியோன் அறிமுகம்
பாலிவுட் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் இப்போது தமிழ் படங்களிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரின் முதல் தமிழ் படம் வடகறி. 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம். இதனை தொடர்ந்த ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பிக்பாஸ் மற்றும் யூ டியூப் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்துவும் நடித்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலையில் கலக்கலாக வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் சன்னி லியோன்
சன்னி லியோனுக்கு பிடித்த நடிகர்
அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்? என கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்த சன்னி லியோன், ” வேலை வேலை என்று இருந்ததால் அதிக திரைப்படங்கள் நான் பார்ப்பது இல்லை. நேரம் கிடைக்கும்போது பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்களை பார்ப்பேன். அதேநேரத்தில் கலைக்கு மொழி முக்கியமில்லை. எந்த மொழி படமாக இருந்தாலும் பார்ப்பேன். தமிழை பொறுத்தவரை எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிடிக்கும். அவர் தான் எனக்கு பிடித்த ஹீரோ” என தெரிவித்துள்ளார்.
சன்னி லியோன் பின்னணி
சன்னி லியோன் பஞ்சாப் தம்பதியினருக்கு பிறந்த குழந்தை. கனடாவில் பிறந்த அவர், குடும்ப கஷ்டம் காரணமாக மாடலிங் துறையில் கால்பதித்து பின்னர் ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கினார். இதனால் உலகம் முழுவதும் சன்னி லியோன் பெயர் பிரபலமடைந்தது. பின்னர், இந்தியா திரும்பிய அவர், ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இப்போது வாய்ப்பு கிடைக்கும் அனைத்து மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.