சென்னையில் கொடூரம்: காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை

சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி கன்னிகா புறத்தை சேர்ந்தவர் விக்கி என்கின்ற விக்னேஷ். தற்போது அயனாவரம் பக்தவச்சலம் தெருவில் மனைவி குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இவர் சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தேவப்பிரியா சென்னை எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை விக்கி தேவ பிரியாவை அவரது அலுவலகத்தில் விட்டு விட்டு எழும்பூர் நெடுஞ்சாலை அருகே உள்ள அவரது நிறுவனத்திற்கு வந்துள்ளார். அப்போது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன் அவருக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு முற்றிய நிலையில் சந்தோஷ் என்ற ஊழியர் விக்னேஷை சரமாரியாக வெட்டி உள்ளார்.

அவரை தடுக்கச் சென்ற அருகில் இருந்த மற்றொரு நபருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதிகப்படியாக வெட்டு காயங்களுடன் தப்ப முயன்ற விக்னேஷ் அந்த வளாகத்திலேயே சாய்த்து உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்துள்ளார். படுகொலை செய்த கொலை குற்றவாளிகள் அலுவலகத்தின் மாடியில் ஏறி கட்டிடம் விட்டு கட்டிடம் ஏறி குதித்து தப்பித்துள்ளனர்.

இது தொடர்பாக திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே பகுதியில் 50 அடி தொலைவில் தான் எழும்பூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. காவல் நிலையம் அருகிலேயே இந்த படுகொலை சம்பவத்தை குற்றவாளிகள் அரங்கேற்றி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.