சென்னையில் 79,305 ச.மீ அளவுக்கு 9,035 சாலைப் பள்ளங்கள் சீரமைப்பு: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் 79,305 சதுர மீட்டர் அளவுக்கு 9,035 சாலைப் பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் மாநகராட்சியின் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் பிற சேவைத் துறைகளான மின்சாரத் துறை, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சீரமைப்புப் பணிகள் மற்றும் பருவமழை ஆகியவற்றின் காரணமாக சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தப் பள்ளங்களை சீரமைக்க, மாநகராட்சியின் 200 வார்டுகளின் உதவிப் பொறியாளர்கள் இரவு நேரங்களில் சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு ஏற்பட்டுள்ள பள்ளங்களை கணக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2,646 சாலைகளில் 1,07,165 சதுர மீட்டர் பரப்பளவில் 10,553 பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில் நேற்று (நவ.17) வரை 79,305 சதுர மீட்டர் பரப்பளவில் 9,035 பள்ளங்கள் சீர்செய்யப்பட்டுள்ளன. இதில் 4,696 பள்ளங்களை சீர்செய்ய 44,262 சதுர மீட்டர் பரப்பளவிற்கு ஜல்லிக் கலவையும் (Wet Mix Macadam), 535 பள்ளங்களை சீர்செய்ய 9,222 சதுர மீட்டர் பரப்பளவிற்கு தார்க்கலவையும் (Hot Mix), 368 பள்ளங்களை சீர்செய்ய 2,369 சதுர மீட்டர் பரப்பளவிற்கு குளிர் தார்க்கலவையும் (Cold Mix), 3,436 பள்ளங்களை சீர்செய்ய 23,451 சதுர மீட்டர் பரப்பளவிற்கு கான்கிரீட் கலவையும், பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.