சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை மாற்றும் கொலிஜியம் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்களுக்குக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜாவை ராஜாஸ்தான் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் கொலிஜியம் அண்மையில் பரிந்துரை செய்தது. கொலிஜியத்தின் இந்த பரிந்துரைக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் லா அசோசியேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் மோகன கிருஷ்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீதிபதி டி.ராஜாவிற்கு இன்னும் ஆறு மாதங்களே பணிக்காலம் உள்ள நிலையில் பணியிட மாற்றம் என்பது நாட்டின் ஒட்டுமொத்த நீதித்துறைக்கான கெட்ட செய்தி என குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி டி.ராஜாவின் பணியிட மாற்ற பரிந்துரையை திரும்ப பெற்று சென்னை உயர் நீதிமன்றத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி டி.ராஜா பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள லா அசோசியேசன், இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ள நீதிபதி டி.ராஜாவை பணியிட மாற்றம் செய்வது உகந்ததல்ல என்று கூறுகிறது. மேலும், நீதிபதி டி.ராஜாவின் ஒப்புதல் இன்றி பணியிட மாற்றம் செய்வதற்கு கொலிஜியம் பரிந்துரைத்தது என்பது, ஆரோக்கியமான சூழல் அல்ல எனக்கூறி தீர்மானம் லா அசோசியேசன் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளது