சென்னை: பட்டப்பகலில் எழும்பூர் காவல் நிலையம் அருகே ஐடி நிறுவன ஊழியர் கொலை!

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் விவேக். ஐடி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி தேவிபிரியா. இந்தத் தம்பதியருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. விவேக்கின் மனைவி தேவிபிரியா, எழும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அதனால் மனைவியை பைக்கில் அழைத்துக் கொண்டு இன்று காலை விவேக், எழும்பூர் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர், வேலைக்குச் செல்ல சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்துக்குப் புறப்பட்டார்.

விவேக்கின் உறவினர்கள் கதறி அழும் காட்சி

எழும்பூர் நெடுஞ்சாலையில் சென்ற விவேக்கை, அவருடன் பணியாற்றிய சந்தோஷ் என்ற ஊழியர் வழிமறித்திருக்கிறார். பின்னர் சந்தோஷ், அவருடன் வந்த சிலர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டினர். இதில் விவேக் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். விவேக்கின் அலறல் சத்தம் கேட்டு அவரின் நண்பர் அருண் அங்கு வந்தார். அவர், விவேக்கை காப்பாற்ற முயன்றார். அதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் கும்பல், அருணையும் வெட்டியது. பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலைவெறித் தாக்குதலில் விவேக் உயிரிழந்தார்.

இதையடுத்து சந்தோஷ், அவருடன் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் அங்கு வந்து விவேக்கின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். படுகாயமடைந்த அருண், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் சந்தோஷ், அவருடன் வந்தவர்கள் குறித்த விவரங்கள் தெரியவந்திருக்கிறது. அதனடிப்படையில் போலீஸார் அவர்களைத் தேடிவருகின்றனர்.

கொலைசெய்யப்பட்ட விவேக்

இது குறித்து போலீஸார், “கொலைசெய்யப்பட்ட விவேக்கிற்கும் சந்தோஷ் என்பவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. அதன்காரணமாகத்தான் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. சந்தோஷ், அவரின் கூட்டாளிகள் சிக்கினால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும். கொலையாளிகள் மாடிப்படி வழியாக தப்பி ஓடியிருக்கிறார்கள். அவர்களைத் தேடி வருகிறோம்” என்றனர்.

விவேக், கொலைசெய்யப்பட்ட தகவலைக் கேள்விபட்டதும் அவரின் மனைவி, உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் கொலையாளிகளை கைதுசெய்ய வேண்டும் என்று கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.