தமிழ் திரைப்படங்களின் வெளியிட்டுருக்கு எதிராக தெலுங்கு தயாரிப்பாளருக்கு சங்கம் எடுத்த முடிவு திரும்ப பெறாவிட்டால் தமிழகத்தில் தெலுங்கு திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளது. விஜயின் வாரிசு படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தெலுங்கு பிலிம் சேம்பர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் தெலுங்கு நடிகர்கள் பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹ ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டயர் வீரையா ஆகிய படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பாக “ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலத்தைச் சேர்ந்த துறையினருக்கும் புகலிடமாகவும் மூலமாகவும் விளங்கிய தமிழ் திரையுலகத்தை வஞ்சிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் அன்புத்தம்பி விஜயின் வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டிற்கான திரையரங்குகள் ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கல் அல்ல. தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டிற்கு எதிராகவே ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக நெருக்கடி ஆகும். இதனை ஒருபோதும் ஏற்கவோ அனுமதிக்கவோ முடியாது. ஆகவே தமிழ் திரைப்படங்களின் வெளியிட்டுருக்கு எதிரான தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனே திரும்ப பெற வேண்டும். அதனை செய்யத் தவறும் பட்சத்தில் தெலுங்கு திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்” என சீமான் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.