கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று (17 –ம் தேதி) காலை, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு மேற்கொண்டார். மாலையில் ஓசூரில் பா.ஜ.க, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பின் பேட்டியளித்தார்.
அமைச்சர் கிரிராஜ் சிங் நிருபர்களிடம், “நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், நான் பார்த்தவரையில் தமிழக அரசு அலுவலகங்களில், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர்களின் படங்கள் வைக்கப்படாமல் உள்ளன. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு தொடர்ந்து, பல வகைகளில் கூட்டாட்சி அமைப்பை சிதைத்து நாசமாக்குகிறது. தமிழக மக்கள், தி.மு.க.,வுக்கு உரிய நீதியை விரைவில் வழங்க வேண்டும்.

தமிழகத்தில், பா.ஜ.க, தலைமையிலான மத்திய அரசு கடந்த, 8 ஆண்டுகளில் மக்களுக்கான பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி, பல்லாயிரம் கோடிகள் நிதி வழங்கியுள்ளன. காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியதை விட, பல மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்கட்டமைப்புக்காக, 874-க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக, தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் நல்ல திட்டங்களுக்கு, ஸ்டாலின் உரிமை கொண்டாடி அதற்கான பலனை அனுபவிக்க முயற்சி செய்கிறார். பா.ஜ,க தலைமையிலான மத்திய அரசு, ஒரு போதும் தமிழக மக்களை புறக்கணிக்காது’’ எனக் காட்டமாக பேசினார்.