டெல்லியில், இன்று மற்றும் நாளை என இரண்டு நாள்கள், `No Money for Terror’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. தீவிரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதை முற்றிலும் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மாநாடு இன்று காலை தொடங்கியது. இதில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார்.

மாநாட்டில் தொடக்கவுரை நிகழ்த்திய மோடி, “தீவிரவாதத்தின் இருண்ட முகத்தை இந்த உலகம் தீவிரமாகக் கவனிக்கும் முன்பே நம் நாடு சந்தித்துவிட்டது. தீவிரவாதம் என்பது, மனிதநேயம், சுதந்திரம் மற்றும் நாகரித்தின் மீதான தாக்குதல். பல தசாப்தங்களாக தீவிரவாதம் பல்வேறு வடிவங்களில் இந்தியாவை அச்சுறுத்த முயன்றன. இதில் ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் இழந்தோம். ஆனாலும் தீவிரவாதத்தை தைரியமாக எதிர்த்துப் போராடினோம் நாம். ஒரு தாக்குதல் நடந்தாலும் அது தீவிரவாதம் தான். அதேபோல் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டாலும் அதனைப் பெரிய இழப்பாகத் தான் கருதுகிறோம். எனவே தீவிரவாதத்தை வேரறுக்கும்வரை நாங்கள் ஓயமாட்டோம்.

தீவிரவாதத்தின் நீண்டகால தாக்கம் ஏழைகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தின் மீது கடுமையாக இருக்கிறது. எனவே, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்யும் வேரைக் கண்டறிந்து அதனைத் தாக்குவது மிகமுக்கியமானது” என்று தெரிவித்தார்.
மேலும் மோடி, சில நாடுகள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும், அத்தகையவர்களுக்கு எந்தநாட்டிலும் இடமில்லை என்றும் தெரிவித்தார்.