புதுச்சேரி: “நாட்டில் ஒன்றுபட்ட தன்மையை, ஒற்றுமையை வலியுறுத்துவதாக சாசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு இருக்கிறது” என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழுக்கும் காசிக்கும் இருக்கும் கலாச்சார, ஆன்மிக, சமூக இணைப்பை போற்றும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரியில் இருந்து சுமார் 300 பேர் பங்கேற்பதற்காக காசிக்கு பதிவு செய்து உள்ளனர். தமிழுக்கும் காசிக்கும் உள்ள இணைப்பை வலியுறுத்தும் ஆன்மிகத் தலமாக திருக்காஞ்சி விளங்கி வருகிறது. ஆகையால் கங்கையின் இணைப்பைப் போற்றும் வகையில் இப்பகுதியில் உள்ள கங்கவராக நதீஸ்வரர் கோயில் உள்ளது. கங்கை நதிக்கு நிகராக இங்குள்ள சங்கராபரணி ஆறு உள்ளது.
எனவே, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கங்கைக்கும், காசிக்கும், தமிழுக்கும் உள்ள பிணைப்பை கொண்டாடுவதற்காக பிரதமரின் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று திருக்காஞ்சி கோயிலில் சிறப்பு பூஜை செய்து காஞ்சி தமிழ்ச் சங்கமத்தை கொண்டாடடினார். அப்போது அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் உடனிருந்தார்.
அப்போது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது: ”காசிக்கும், தமிழுக்கும் காலாச்சார ஆன்மிக இணைப்பும், பிணைப்பும் பாசப்பிண்ப்பும் உள்ளது. அங்கு காசி இருக்கிறது, தமிழகத்தில் தென்காசி இருக்கிறது. இந்தியா முழுவதும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் புனிதஸ்தலம் என்று சொல்லும்போது காசி, ராமேஸ்வரம் என்று தான் சொல்வார்கள்.
அப்படியானால் நமக்கும், காசிக்கும் உள்ள இணைப்பு காலம் காலமாக இருந்து கொண்டிருக்கிறது. காசி, ராமேஸ்வரம் வந்து செல்பவர்கள் திருக்காஞ்சிக்கும் வந்து சென்றுள்ளனர் என்ற தகவலும் உள்ளது. இதனால் காசிக்கும், திருக்காஞ்சிக்கும் ஒரு இணைப்பு இருக்கிறது. இங்குள்ள சிவபெருமானை கங்கேஸ்வரன் என்ற பெயரிலும், சங்கரனுக்கு ஆபரணமாக இருப்பதால் சங்கராபரணி ஆறு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை பிரதமர் முன்னெடுத்துச் செல்கிறார். இதற்கு புதுச்சேரியில் இருந்து பிரதிநிதிகள் செல்கின்றனர்.
நாட்டில் ஒன்றுபட்ட தன்மையை, ஒற்றுமையை வலியுறுத்துவதாக இந்த நிகழ்வு இருக்கிறது. ஆதலால்தான் பிரதமர் நாளை காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வு ஆன்மிக ரீதியாக இருப்பதால் இறைவனை பிரார்த்திக்க நினைக்கின்றோம். தினம் தினம் நாம் கொண்டாடக்கூடிய ஒரு நிகழ்வாக இது இருக்கிறது. ராமஸே்வரத்தில் இருந்து ரயில் மூலம் 22 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் இருந்த 300 பேர் பதிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.