பிடிஆரை வெளுத்துவிட்ட அமைச்சர்; திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு!

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் 69வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ரூ. 37.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கினர்.

இதன் பிறகு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழக மக்களிடையே திட்டங்கள் அனைத்தும் முறையாக சேர்த்து வருவதில், கூட்டுறவு துறை முதன்மையாக உள்ளது. தற்போது வரை ரூ. 7200 கோடி விவசாய கடன்கள், ரூ. 900 கோடி சுயஉதவி குழு கடன் வழங்கப்பட்டு இருக்கிறது.

கூட்டுறவு தானிய கிடங்கில் 33 சதவீதம் தானியங்களை வைத்துக்கொண்டு இந்தியாவில் எங்கு விலை அதிகமோ அங்கு தான் விற்க முடியும். இதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

இதற்காக மத்திய அரசு பாராட்டி விருது அறிவித்து இருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் உள்பட சிறப்பாக செயல்படுவதற்கு பாராட்டப்படுகிறோம்.

அரசு நிதியை எதிர்பார்க்காமலேயே கூட்டுறவில் வரும் லாபத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். இதில் வெளிப்படைத்தன்மை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

குறைகள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் குறைகள் எங்கே நடக்கின்றன? என சொன்னால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் பி.டி.ஆர் கருத்து பற்றி அவரையே கேளுங்கள்.

என்ன நடந்தது? எங்கே தவறு நடந்தது? என்று அவர் கூறுவார். அமைச்சர் பிடிஆர் திருப்தி அடையவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது? மக்கள் திருப்தி அடைய வேண்டும்.

எனக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும் 7 கோடி மக்கள் திருப்தி அடைய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் திருப்தி அடைய வேண்டும். வேறு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

நான் 50 ஆண்டு காலம் தமிழக அரசியலில் இருக்கிறேன். அமைச்சர் சக்கரபாணி 35 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறார். 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

மக்களின் திருப்தி தான் எங்களுக்கு திருப்தி. எந்த திட்டமாக இருந்தாலும் மக்களின் கைகளில் உடனடியாக கொண்டு போய் சேர்த்திட வேண்டும். அது தான் எங்கள் வேலை.

நாங்கள் இருவருமே வேலைக்காரர்கள். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். அவர்கள் திருப்தி அடைய வேண்டும். அதை தான் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.

இது, மக்களுக்கான துறை. உணவுப் பொருள் வழங்கல் துறையும் அதற்காக தான் உள்ளது. எங்காவது குறை இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் மாலை போட்டு உங்களுக்கு மரியாதை செய்வோம்.

குறையை நீங்கள் சொன்னால் நாங்கள் சந்தோஷப்படுவோம். மக்கள் தான் திருப்தி அடைய வேண்டும். ரேஷன் கடையை பற்றி தெரியாதவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

நாங்கள் நிதியே கேட்கவில்லை. அவரையே கேளுங்கள். மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். தமிழக முதல்வர் திருப்தியாக இருக்கிறார். அதற்காக தான் எங்களை அமைச்சராக்கி உள்ளார்.

பெருமைக்காகவும், சுயலாபத்திற்காகவும் நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. பொதுநல அக்கறையோடு அரசியலுக்கு வந்தவர்கள். இவ்வாறு அமைச்சர் பெரியசாமி கூறினார்.

தமிழக நிதி அமைச்சராக கூட்டுறவு துறையின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தியாக இல்லை அமைச்சர் பிடிஆர் விமர்சித்து இருந்த நிலையில் அதற்கு பதிலடியாக அமைச்சர் பெரியசாமி சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்திலும், திமுக முகாமிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.