புதுக்கோட்டை: கோயிலில் திருடியதாக தாக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த வழக்கில் 6 பேர் கைது

புதுக்கோட்டை அருகே கோயில் பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டோவில் தப்ப முயன்ற கும்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயம் அடைந்த 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளான  ஆழ்வாய்பட்டி, கீழையூர்,அரையான்பட்டி, வாரியப்பட்டி உள்ளிட்டகிராமங்களில் இருந்த கோயில்களில் வெண்கல குத்துவிளக்கு, மணி உள்ளிட்ட பொருட்களை திருடிக் கொண்டு ஒரு கும்பல் கடந்த 14 ஆம் தேதி மாலை ஆட்டோவில் தப்பியுள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள்  மற்றும் இளைஞர்கள் ஆட்டோவில் தப்பிச்செல்லும் கும்பலை இருசக்கர வாகனங்களில் சென்று விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் ஆட்டோவை வேகமாக ஓட்டிச் சென்றதோடு ஆட்டோவில் இருந்த கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட வெண்கல பொருட்களையும் துரத்தி வந்த நபர்கள் மீது வீசி எறிந்தனர்.எனினும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்த ஊர் மக்களும் இளைஞர்களும் திரைப்பட பாணியில் சேசிங் செய்து புதுக்கோட்டை நகர் பகுதிக்குள் இருக்கும் மச்சுவாடி எனும் இடத்தில் அந்த ஆட்டோவை வழிமறித்து பிடித்தனர்.

image
இதில் பொதுமக்கள் சிலர் அந்தக் கொள்ளை கும்பலை சேர்ந்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த ஆட்டோவில் இருந்த 10 வயது சிறுமியான கற்பகாம்பிகா படுகாயம் அடைந்ததால் அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் இந்த சம்பவத்தின் போது லேசான காயமடைந்த கோயில்களில் திருடிக் கொண்டு ஆட்டோவில் தப்பி வந்த கும்பலான கடலூர் மாவட்ட விருத்தாசலத்தை சேர்ந்த சத்தியநாராயணசாமி, அவரது மனைவி லில்லி புஷ்பா மகன்கள் விக்னேஸ்வரசாமி, சுபமெய்யசாமி மற்றும் மகள் ஆதிலட்சுமி உள்ளிட்ட மற்ற 5 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

இந்த சம்பவத்தில் கற்பகாம்பிகா உயிரிழந்ததை தொடர்ந்து தனது மகளை தாக்கிய கொலை செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் லில்லி புஷ்பா கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். குற்றவாளிகளை கைது செய்தால் தான் தனது மகளின் சடலத்தையும் பெறுவேன் என அவர் போலீசாரிடம் முறையிட்டதால் இதுகுறித்து ஏற்கனவே வழக்குப் பதிவு செய்திருந்த கணேஷ் நகர் போலீசார் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். சம்பவத்தன்று ஆட்டோவை திரைப்பட பாணியில் துரத்தி வந்த நபர்களில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட புதுக்குடியான்பட்டியை சேர்ந்த செல்வம், முருகேசன் அதேபோல வைத்தூரை சேர்ந்த சந்திரசேகர், பொங்கலாபபட்டியைச் சேர்ந்த வீரய்யா, மூட்டாம்பட்டி சேர்ந்த பாஸ்கர், மச்சுவாடியை சேர்ந்த பரமசிவம் ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

image
சிறுமி பலியான விவகாரத்தில் இதுவரை ஆறு நபர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அந்த சிறுமியின் தாயார் லில்லி புஷ்பாவிற்கு போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் அதன் பின்பு உயிரிழந்த தனது மகளின் சடலத்தை பெற்றுக்கொண்டார். போலீசாரின் பாதுகாப்போடு புதுக்கோட்டை காந்தி நகர் பகுதியில் உள்ள இடுகாட்டில் சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே கோயில்களில் வெண்கலப் பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிய சத்திய நாராயணசாமி உள்ளிட்ட கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் புகார்  அளித்திருந்த சம்பவத்தில் அது குறித்தும் திருட்டு வழக்குப்பதிவு செய்த உடையாளிப்பட்டி போலீசார் சத்திய நாராயணசாமியை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சத்தியநாராயணசாமி மீது ஏற்கனவே கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கொலை, கொள்ளை மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கோயில் கொள்ளை சம்பவத்தில் கூட்டாக ஈடுபட்ட சத்திய நாராயணசாமி தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் தொடர்ந்து போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளனர். இந்த வழக்கில் அடுத்து என்ன மாதிரியான  நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசனை செய்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.