மதுரை மாநகராட்சியில் ரூ.700 கோடி வரி பாக்கி: காரணம் என்ன?

மதுரை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி மற்றும் கடைகள் வாடகை உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்களையும் சேர்த்து மொத்தம் ரூ.700 கோடி வரிபாக்கி உள்ளது. இந்த வரிகளை வசூல் செய்தால் மட்டுமே மக்களுக்கு அத்தியாவசிய அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும்நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் மொத்தம் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்பட மொத்தம் 3 லட்சம் கட்டிடங்கள் உள்ளன. இதன் மூலம் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, தொழில் வரி மற்றும் கடைகள் வாடகை உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் மாநகராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயை கொண்டே மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம், சாலை, குடிநீர் பராமரிப்பு, பாதாளசாக்கடை சீரமைப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்கிறது.

கடந்த காலத்தில் மத்திய, மாநில அரசுகள் மூலம் ஏராளமான மானிய உதவிகள் கிடைத்தது. தற்போது அவை நின்றுபோய் விட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பிறகு மதுரை மாநகராட்சிக்கு பெரிய நிதியை மத்திய, மாநில அரசுகள் வழங்கவில்லை. அதனால், மாநகராட்சியில் புதிய சாலைகளை போட முடியவில்லை. பழுதடைந்த பாதாள சாக்கடையை நிரந்தரமாக சரி செய்ய முடியவில்லை. மழைநீர் கால்வாய்கள், கழிவு நீர் கால்வாய்களை தூர்வார முடியவில்லை. அதனால், மழை பெய்தாலே மதுரை சாலைகள், சேறும், சகதியுமாக கழிவு நீர் மழைநீருடன் தேங்கி தூர்நாற்றம் வீசுகின்றன. கடந்த ஓர் ஆண்டாக மாநகராட்சி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கே நிதி நெருக்கடி ஏற்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது: ”மாநகராட்சிக்கு பெரும் வருவாயே சொத்து வரி மூலம் கிடைக்கிறது. ஆனால், சொத்து வரி உயர்த்தப்பட்டப்பிறகு மக்கள் வரி செலுத்த ஆர்வமாக வருவதில்லை. கடந்த கால் நூற்றாண்டில், அதாவது கடந்த 25 ஆண்டுகளில் தற்போதுபோல் வரி பாக்கி நிலுவை இல்லை. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தேர்தல் ஆதாயத்திற்காக வரியை வசூலை தீவிரப்படுத்த விடாமல் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்தனர். அதனால், சொத்து வரி பாக்கி நிலுவை அதிகரித்து தற்போது அது ஒன்று மட்டுமே ரூ.340 கோடி நிலுவையில் உள்ளது. 202-22-2023 ஆண்டிற்கான சொத்து வரி மட்டுமே ரூ.200 கோடி நிலுவையில் உள்ளது. கடந்த காலத்தில் ரூ.140 கோடி சொத்து வரி பாக்கி உள்ளது.

அதுபோல், குடிநீர் வரி பாக்கி ரூ.35 கோடி, பாதாள சாக்கடை வரி பாக்கி ரூ.100 கோடி,தொழில் வரி ரூ.26 கோடி வரி பாக்கி உள்ளது. இந்த வரிகளை வசூல் செய்தால் மட்டுமே வார்டுகளில் மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் முடியும்நிலை உள்ளது. அதனால், மக்கள் தங்கள் வரிகளை முறையாக செலுத்த வேண்டும். புதிய சாலைகள் அமைக்கும் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வார்டாக மோசமான சாலைகள் சீரமைக்கும் பணி தொடங்கிவிட்டது. பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் வந்தால் குடிநீர் பாற்றாக்குறை, கழிவு நீர் கலக்கும் பிரச்சினை தீர்ந்து விடும். 100 வார்டுகளிலும் பாதாள சாக்கடைப் பணி 6 மாதத்தில் நிறைவு பெற உள்ளது. அதுவும் வந்துவிட்டால் சாலைகளில் கழிவு நீர் ஓடாது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

நிலுவையில் உள்ள வரியை வசூல் செய்ய மாநகராட்சி வருவாய்த் துறை ஊழியர்கள் வார்டுகள் தோறும் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். வரும் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நிலுவை வரியில் 80 சதவீதத்தை வசூல் செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.