தேனி மாவட்டம் அருகே வடவீரநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலர் துரைபாண்டியன் வீட்டின் மொட்டை மாடியில் சிறுத்தையின் தோல் காய வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள் துரைப்பாண்டியன் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகிவிட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு சிறுத்தையின் தோல் மஞ்சள் பூசி காய வைத்திருந்தை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் “சிறுத்தை தோளினை சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்து மொட்டை மாடியில் காய வைக்கப்பட்டு இருக்கலாம். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுத்தை எங்கே எப்பொழுது யாரால் வேட்டையாடப்பட்டது? எதற்காக சிறுத்தையை வேட்டையாடி தோலை மொட்டை மாடியில் காய வைத்திருக்கிறார்கள் என்பது துரைப்பாண்டியனை கைது செய்து விசாரித்தால் தான் தெரிய வரும்” என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துரைபாண்டியனை தீவிரமாக தேடி வருகின்றனர். இதேபோன்று சில மாதங்களுக்கு முன்பு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் சோலார் மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி நிலையில் தற்பொழுது மொட்டை மாடியில் சிறுத்தையின் தோள் காய வைக்கப்பட்டுள்ள சம்பவம் தேனியில் மீண்டும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.