ம.நீ.ம: “கடந்த ஆண்டுகளில் செய்த தவற்றை இனியும் செய்யக் கூடாது" – சுயபரிசோதனையில் கமல்?!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மூன்று சதவிகித வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் கவனம் ஈர்த்தது. இதனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் ம.நீ.மய்யத்தின் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் நிலவியது.  கூட்டணி அமைக்கலாமா அல்லது தனித்துப் போட்டியிடலாமா என்று ஆலோசனை நடத்திய கமல்ஹாசன், இறுதியில் கூட்டணி முடிவுக்கு வந்தார். அந்த வகையில், தமிழக சட்டமன்றத் தேர்தலை, சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. ஆனால், அந்தக் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவின. மற்ற இடங்களில் தோல்வியைத்  தழுவியபோதும் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்குத் தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.  

கமல் – வானதி சீனிவாசன்

பா.ஜ.க-வைச் சேர்ந்த வானதி சீனிவாசனுக்கும், கமல்ஹாசனுக்கும் இறுதி வரையில் வாக்குகள் விகிதம் ஏற்ற, இறக்கமாக இருந்தது. இறுதியில், 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.

இதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியப்  பொறுப்பிலிருந்தவர்கள் தொடர்ச்சியாகக் கட்சியைவிட்டு வெளியேறினார்கள். குறிப்பாக, துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த மகேந்திரன், சந்தோஷ்பாபு, முருகானந்தம், சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளராக இருந்த பத்மபிரியா, தொழில்முனைவோர் அணியின் மாநிலச் செயலாளராக இருந்த  வீரசக்தி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதேபோல், மாவட்ட அளவிலும் நிர்வாகிகள் மாற்றுக் கட்சியில் இணைந்தார்கள். இதனால், மக்கள் நீதி மய்யம் ஆட்டம் காணத் தொடங்கியது. உள்ளாட்சித் தேர்தல்களிலும் சறுக்கலைச்  சந்தித்தது.  

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்

இதனால், கட்சியை மீட்டெடுக்கவேண்டிய நிலைக்கு கமல்ஹாசன் தள்ளப்பட்டார். இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, சென்னை அண்ணாநகரிலுள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முக்கியக் கூட்டம் என்பதால், அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென கமல்ஹாசன், மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் 117 பேரில் 114 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றார்கள். இந்தக் கூட்டத்தில் கமல்ஹாசன் விவாதித்த விஷயங்கள் அனைத்தும் எதிர்கால அரசியல், நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணி வியூகம் ஆகியவற்றை உள்ளடக்கியே இருந்தன.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கமல்

கூட்டத்துக்குப் பின்னர், சரிவிலிருந்து கட்சியை மீட்டெடுக்க முழுவதும் சுயபரிசோதனையில் கமல்ஹாசன் இறங்கியிருப்பதாக அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து அவர்களிடம் பேசினோம். “2019 தேர்தலில் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் தேர்தலைச்  சந்தித்தோம். தேர்தல் பரீட்சைக்குக் கட்சியே தயாராக இல்லை. இருந்தாலும் 3 சதவிகித ஓட்டை மக்கள் வாரி வழங்கினார்கள். இதேபோல், சட்டமன்றத் தேர்தலில் சரியான திட்டமிடல் இல்லாமல் கூட்டணிவைத்தது படுதோல்விக்குக் காரணமாக அமைந்தது. 

கட்சிக்குக் கிளை வரையில் பிரதிநிதிகள் இல்லாதது கட்சி வளர்ச்சியடையாததற்கு மற்றொரு காரணம் எனவும், கிளை வரையில் நிர்வாகிகளை நியமித்தால் மட்டுமே கட்சியின் செயல்பாடுகளும், பொதுமக்களின் பிரச்னைகள்  என்னவென்று கட்சித் தலைமைக்குத் தெரியும் என்றும் கூட்டத்தில் பேசினோம். மாவட்டச் செயலாளர்களிடம் கேள்வி, பதிலாக இந்தக் கூட்டம் அமைந்தது.

கோப்பு படம்: கமல்

இந்த கூட்டத்துக்குப் பிறகு கீழ்மட்டம் வரையில் அமைப்பை பலப்படுத்துவது, மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த சமூக வலைதளங்களில் தீவிரமாகச் செயல்படுவது, மற்ற கட்சிகள் தானே தேடிவந்து கூட்டணிவைக்கும் அளவுக்குக் கட்சியை  பலப்படுத்துவது ஆகிய பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டிருக்கிறார். கூடிய விரைவில் கிளை நிர்வாகிகள் நியமனம் குறித்த அறிவிப்பு இருக்கும். கடந்த ஆண்டுகளில் செய்த தவற்றை இனியும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில், 2024-ல் மக்கள் நீதி மய்யம் கூட்டணிவைத்து தேர்தலைச் சந்திக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதற்கான பணிகளில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார்” என்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.