ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்தது போல், 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என்னையும் விடுதலை செய்யுங்கள் எனக் கோரி, கர்நாடகாவைச் சேர்ந்த 80 வயது நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஷரத்தானந்தா என்ற முரளி மனோகர் மிஸ்ரா. இவர், மைசூரு முன்னாள் திவான் சர் மிர்ஸா இஸ்மாயில் பேத்தி ஷகரேக் நமாஸியை கடந்த 1986-ம் ஆண்டு திருமணம் செய்தார்.
இந்நிலையில், கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி பெங்களூருவில் உள்ள பங்களாவில் தன் மனைவி நமாஸிக்கு மயக்க மருந்து கொடுத்து, உயிருடன் புதைத்து கொன்றதாக ஷரத்தானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், இவருக்கு துாக்கு தண்டனை விதித்து கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், 1994-ல் இருந்து தொடர்ந்து 29 ஆண்டாக சிறையில் உள்ள ஷரத்தானந்தா (80) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுல்ளது. அதில், “ஒரே ஒரு கொலை வழக்கில் என்னை ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்துள்ளனர். தண்டனையை குறைக்க முடியாது என்ற நிபந்தனையுடன் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், சிறை நிர்வாகம் எனக்கு ஒருமுறை கூட பரோல் தரவில்லை.
அதே நேரத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் அவருடன் பலர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர். என்னுடைய வழக்கில் தனிமனித உரிமை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. எனவே, ராஜீவ் கொலையாளிகளைப் போல, என்னையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.