அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA)நாளை (நவம்பர் 19) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் நாடு முழுவதும் வங்கிகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தில் செயலாற்றியதற்காக வங்கி பணியாளர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாகவும், அதனை கண்டித்து உறுப்பினர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AIBEA பொதுச் செயலாளர் சி.ஹெச். வெங்கடாசலம், ஊழியர்களிடம்,”சமீப காலமாக பணியாளர்கள் மீதான வஞ்சகம் அதிகரித்து வருவது மட்டுமின்றி, இவை அனைத்திலும் பொதுவான தொடர்பு ஒன்று உள்ளது.
பணியாளர்கள் மீதான இந்த பாரபட்சத்தை திட்டமிட்டு செய்கின்றனர். சில வழிமுறைகள் வேடிக்கையாக உள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக இந்த வகை தாக்குதல்களை எதிர்த்து, பதிலடி கொடுத்து மற்றும் வஞ்சத்தை முறியடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
AIBEA தொழிற்சங்கத் தலைவர்கள், சோனாலி வங்கி, MUFG வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஆகியவற்றால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் / சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என வெங்கடசாலம் தெரிவித்தார்.
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா போன்ற அரசு வங்கிகள் தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதாகவும், கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் ஐடிபிஐ வங்கிகள் பல வங்கி செயல்பாட்டிற்கு, பணியாளர்கள் அல்லாமல் வெளியாட்கள் மூலம் செய்வதாகவும் வெங்கடாசலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிதான், பணியாளர்களை நியாமற்ற முறையில் இடமாற்றம் செய்யும் நிர்வாகமாக உள்ளது எனவும் தெரிவித்தார். இருதரப்பு தீர்வு மற்றும் வங்கி அளவிலான தீர்வை மீறி 3,300க்கும் மேற்பட்ட எழுத்தர் ஊழியர்கள் ஒரு நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்த அவர், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் பல்வேறு வழிமுறைகளை நாளை நடத்தும் என தெரிவித்தார்.